வெள்ளி, ஜூன் 18, 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தந்தை பெரியார்
தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப் படுத்தப்படவேண்டும்.மக்கள் கற்க மேலும் இலகுவக்கப்படவேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப் படவேண்டும். இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி. வெகு காலமாக சீர்திருத்தம் செய்யப்படாதது. மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது என்பதான இவைகள் ஒரு மொழிக்கு குறைவாகுமே தவிற பெருமை ஆகாது என்பேன். ஏன் ? பழமையெல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது. திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும் திருத்துவதும் யருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ ஆகிவிடாது. மேன்மையடையவும் காலத்தோடு கலந்து செல்லவும் எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய் பாட்டிகாலத்திய பண்டைகாலத்தியபெருமைகளைபேசிக்கொண்டிருந்தால்ஒதுக்கப்பட்டுப்போவோம். மொழி என்பது உலக போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்துக்கேற்ப மாற்றப்படவேண்டும். அவ்வப்போது கண்டு பிடித்துக்கொள்ளபடவேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்து விட்டார்கள் . தமிழ் சிவனும் சுப்ரமணியனும் பேசிய மொழி , உண்டாக்கிய மொழி என்று நம் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
அதே சிவனும் சுப்ரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா. அவைகளை நாம் இன்று பயன் படுத்துவோமா. அல்லது அவர்களே இன்று போரிட நேர்ந்தால் அவைகளைப் பயன்படுத்துவார்களா. சிந்தித்துப்பாருங்கள்.கடவுள் உண்டாக்கினார் என்பது நமக்குத் தோன்றிய இயற்கைத் தத்துவம் ஆகும். இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக்கூடியதேயாகும். சிவன் மழுவும் கத்தியும் வேலும் ஆலமும் கொண்டுதான் சண்டை பிடித்திருக்கிறாராம். விஷ்ணு வந்த பிறகே வில் வந்திருக்கிறது. அதன் பிறகே துப்பாக்கியும் அதிலிருந்து பீரங்கியும் மிஷின் பீரங்கியும் ஏற்பட்டு இன்று அணுகுண்டு வரை போர்கருவிகள் முன்னேற்றமாகியிருக்கின்றன. இன்று நாமோ நம் கடவுளோ போரிட நேர்ந்தால் வில்லும் வேலுமா உபயோகிப்போம். ஆகவே போர்க்கருவிகள் மாற்றமடைந்திருப்பது போல் நமது மொழியும் மாற்றமடைய வேண்டாமா போர்க்கருவிகளில் மாற்றத்தை அநுமதித்த கடவுள்கள் மொழி மாற்றத்தை மட்டுமா அனுமதிக்க மாட்டார்கள்.ஆகவே மாற்றுங்கள்.

பிறர் சுலபமாக தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் சுலபமாக அச்சுக்கோக்கவும் டைப் அடிக்கவும் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன். தமிழில் எழுத்துக்கள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துக்கள் அதிகம். மொத்த எழுத்துக்கள் 216 வேண்டியிருக்கிறது. என்றால் இதில் 135 எழுத்துக்கள் உருவங்கள் தனித்தனியாக ஞாபகத்தில் வைக்கவேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் ஆங்கிலம் முதலிய அன்னிய மொழி எழுத்துக்களைவிட எழுத்து கூட்டுவதற்கு ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிய நேர்முறையை கொண்டதனாலும் எழுத்துக்களை கற்க வேண்டியது கஷ்டமாகிறது. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே உள்ளன. அவைகளில் உயிர் எழுத்துக்கள் 5 அல்லது 6 . மெய் எழுத்துக்கள் 20 என்னலாம். எல்லாம் தனி எழுத்துக்களே. உயிர்மெய் எழுத்துக்கள் அதாவது உயிரும் மெய்யும் கூடிய எழுத்துக்கள் கிடையாது. வெகு சுலபமாக எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இலக்கணமுறை உச்சரிப்பு முறை ஒரு பொது வரையரைக்கு கட்டுப்பட்டதல்ல. தமிழ் அப்படியல்ல. எழுத்துக்கூட்டுதலும் இலக்கணமும் அதன் உச்சரிப்பும் பெரிதும் இயறகையையே அடிப்படையாக கொண்டதாகும். அப்படிப்பட்ட மொழியை நாம் ஏன் நவீன முயற்சிக்கு ஏற்ற வண்ணம் செப்பனிடக் கூடாது. சாதாரணமாக தமிழ் உயிர் எழுத்துக்களில்
ஐ , ஒள ஆகிய இரண்டு எழுத்துக்களைக் குறைத்து விடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துக்கள். மேலும் இவை கூட்டெழுத்துக்களே ஒழிய தனியெழுத்துக்களல்ல. இவை இல்லாமல் எந்த தமிழ் சொல்லையும் எழுதலாம் உச்சரிக்கலாம். இவைகளை எடுத்துவிட்டால் சொற்களில் உச்சரிப்பிலோ பொருளிலோ இலக்கணத்திலோ எவ்வித குற்றமும் குறையும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. சுமார் 40 வருடத்திற்கு முன்னால் இருந்தே நான் இதைக் கவனித்து வந்திருக்கிறேன், இதன்படி எழுத்து கோத்து அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு குறள் புத்தகத்தையும் நான் 40 வருடத்துக்கு முன்பே பார்த்திருக்கிறேன்.இப்படிச் செய்வதில் மொத்த்தம் 38 எழுத்துக்கள் ( அதாவது உயிரெழுத்து ஐ ஒள ஆகிய 2 ம் அவை ஏறும் மெய்யெத்துக்களில் 2 * 18 = 36 ம் ஆக 36 + 2 = 38 ) ஞாபகத்திற்கும் பழக்கத்திற்கும் தேவையில்லாத எழுத்துக்கள் ஆகிவிடும். ( ஐ -அய் , ஒள – அவ் என்று எழுதலாம். ) இவை தவிர உயிர் மெய் எழுத்துக்களில் தனிமாற்ற்ம் பெற்றிருக்கிற ணா , றா , னா ஆகிய மூன்று எழுத்துக்களுக்கும் தனி உருவம் தேவையில்லாமல் ணா, றா, னா போல் எழுதலாம் .மற்றும் மெய் எழுத்துக்களில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில், நெடில் , எழுத்துக்கள் கொண்ட 4*18 =72 தனி உருவ எழுத்துக்களை நீக்கி விட்டு,தனிச்சிறப்புக் குறிப்பை (அதாவது ககரத்துக்கு ஆகார நெடில் உருவம் காட்ட ஒரு ா – கால் போட்டுவிடுவதுபோல் , ககரத்துக்கு எகரம், ஏகாரம் காட்ட ஒற்றைச்சுழி கொம்பு ,இரட்டைச்சுழி கொம்பு ெ , ே போடுவதுபோல மற்ற இகர ஈகாரத்துக்கும்,உகர ஊகாரத்துக்கும் சில குறிப்புகளை உண்டாக்கி உயிர் 10 மெய 18 குறில் நெடில் குறிகள் 9 ஆயுதம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துக்களாய் சுறுக்கி விடலாம்.
இதைப்பற்றி மற்றொரு சொற்பெருக்கில் தெளிவாக்க இருக்கிறேன். இந்த மாறுதல்களை செய்வதால் நாம் மொழிக்கோ பெருளுக்கோ
இலக்கணத்துக்கோ எவ்வித குறைபாடோ கேடோ செய்தவர்களாக ஆகமாட்டோம். துருக்கியில் கமால் பாட்சா அவர்கள் எழுத்துக்களின் அடிப்படையையே மாற்றி விட்டார்.அதாவது இருந்த எழுத்துக்களையே ஒழித்து விட்டு வேறு மொழி (ஆங்கில ) எழுத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டார்.அதனால கற்க மிகவும் வசதியம் இலகுவும் ஏற்பட்டுவிட்டது. அய்ரோப்பாவில் நான் சுற்றுப்பயணம் செய்த ரஷ்யா முதல் போர்த்துகல் வரை சுமார் 10 ,15 நாடுகளிலும் எத்தனையோ மொழிகள் இருந்தும் அந்த மொழிகளுக்கு பெரிதும் ஒரே மாதிரி 26 முதல் 32 எழுத்துக்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சில புதிய தனி ஒலி கொண்ட மொழிகள் இருக்குமானால் அவற்றிற்கு 2 அல்லது 3 புதிய உருவ எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டுருக்கிறார்கள்.அமெரிக்காவில் தற்சமயம் எழுத்துக்கூட்டும் முறையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.ஆகவே மேல் நாடுகளில் எழுத்துக்கள் , எழுத்துக்கூட்டும் முறைகள் இவைகளில் மாற்றம் செய்வதால் இலக்கணத்தில் உச்சரிப்பில் பொருளில் மாற்றம் ஏற்படுவதாயிருந்தாலும் கூட துணிவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்லும் மாற்றங்களுக்கு அப்படிப்பட்ட குற்றங்குறைகள் இல்லையென்றே கருதுகிறேன்.
நமது தமிழ் பண்டிதர்கள் இம்மாற்ங்களுக்கு ஒப்புக்கொள்ளவேண்டுமே. அதுவன்றோ பெரிய கஷ்டம், மேல் நாடுகளில் பண்டிதர்கள் என்றால் புத்துலக சிற்பிகளாக இருப்பார்கள். நம் நாட்டிலோ பண்டிதர்கள் என்றால் பழமைக்கு இழுத்துக்கொண்டுபோகும் பாட்டிக்கதை வீரர்களாக இருக்கிறார்கள். பண்டு என்ற சொல்லிலிருந்து அதாவது பண்டையர்கள் என்பதுதான் பண்டிதர் என்ற சொல்லாகத் திரிந்தது என்று கண்டு பிடிக்கத்தக்கவர்களாக இருக்கிறார்கள். எழுத்து மொழி சீர்திருத்தத்தில் எனக்குத் தெரிய எந்த பண்டிதரும் பாடுபட்டு இருப்பதாக காணமுடியவில்லை. காலம் சென்ற மாணிக்க நாய்க்கர் அவர்கள் அக்காலத்தில் சிறிது பாடுபட்டார். ஆனல் அவர் சமயத்தை (ஓங்காரத்தை ) தலையாக வைத்துக்கொண்டு பாடுபட்டார்.ஆதலால் அக்காலத்தில அவரிடத்தில் எனக்கு பற்றிருந்தும் எனக்கு ஓங்காரத்தில் இருந்த வெறுப்பு அவரது முயற்சியையும் அறிவுத்திறனையும் அநுபுவிக்க முடியாமற் செய்து விட்டது. அவர் இப்போதிருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்.

அடுத்தபடியாக மெய்யெழுத்துக்களில் ந,ங,ஞ ஆகிய மூன்று எழுத்துக்களையம் எடுத்து விடலாம். ன் + த =ந , ன் + க = ங ,ன் + ச = ஞ என்று ஆக்கிவிடலாம். எனவே மெயெழுத்தில் ந , ங , ஞ ஆகிய மூன்றையும் குறைக்கலாம். இவைத் தனித்தனியாக தேவையில்லை என்றே தோன்றுகிறது. உயிரெழுத்துக்களில் அய்யும் அவ்வும் உயிர்மெய்யில் உள்ள கூட்டெழுத்துக்கள்தான் இந்த ந , ங , ஞ என்ற மூன்றும். பந்து என்ற வார்த்தையும் பஞ்சு என்ற வார்த்தையையும் எடுத்துக்கொள்வோம். ந வையும் ஞ வயையும் எடுத்து விட்டால் பன்து ,பன்கு பன்சு என்று எழுத வேண்டியிருக்கும். இந்த சொற்களின் உச்சரிப்பை முதலில் சொல்லிக்கொடுத்துவிடலாம். அல்லது சாதாரணமாக உச்சரிப்பு பழக்கத்திலேயே இருந்து வரும். பொதுவாகவே த வுக்கு முன் வந்தால் இப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டால் பிறகு உச்சரிப்பில் கஷ்டமிருக்காது. ஆங்கிலத்தில் இம்மாதிரி பல உச்சரிப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக put பி – யு – டி பட் என்றும் but பி – யு – டி பட் என்றும் தான் உச்சரிப்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் அறிமுகமாகாமலிருந்தால் ஒரே மாதிரிதான் உச்சரிக்க வேண்டியிருக்கும் . ஒரு எழுத்துக்கு பல சப்தங்கள் இருப்பதும் தமிழுக்கு புதிதல்ல. த என்ற எழுத்து தடி என்ற சொல்லில் ஒரு விதமாகவும் பதம் என்ற சொல்லில் வேறுவிதமாகவும் ஒலிக்கவில்லையா.அதே போல் ன என்ற எழுத்துக்கே ந சப்தமும் ங சப்தமும் ஞ சப்தமும் இருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. இந்த சீர்திருத்தங்களைச் செய்தால் தமிழ் தனி உருவ எழுத்துக்கள் வெகு சொற்பமாகிவிடும்..
உயிர் எழுத்துக்கள் 10 . நெட்டெழுத்துக்கள் எல்லாவற்றிர்கும் ா கால் போட்டுவிடுவதால் அய்ந்து உருவ எழுத்துக்கள் தான் இருக்கும் . அதாவது ( ஆங்கில வவ்வல்கள் போலே ) அ , இ , உ , எ , ஒ . நெட்டெழுத்துக்கள் அா , இா உா எா ஒா என்றே எழுதலாம்.. மெய்யெழுத்துக்கள் 18 ல் 3+எழுத்துக்கள் ந் ங் ஞ் எடுக்கப்பட்டால் 15 எழுத்துக்களையும் மேலே புள்ளி வைக்காமல் பக்கத்தில் ஒரே ஒரு கோடு இழுப்பதன் மூலம் காட்டலாம் அதாவது க/, ச/ , ட/ , ண/ , த/ , ………..ன/ , என்றபடி எழுதினால் க் , ச் ,…. என்று அர்த்தப்படுத்தி படிக்கலாம்.ஆக சிறப்புக்குறிகளில்
இகர , இாகாரத்திற்கும் , உகர உாகாரத்திற்கும் 4 குறிகள் புதிதாக தோற்றிவிக்கப்படவேண்டும் ஏகாரத்திற்கும் ஓகாரத்திற்கும் எகர , ஏகார ஆகாரக் குறிப்புகளே பயன்பட்டு விடுவதால் அவற்றிற்காக தனிக்குறிப்பு வேண்டியதில்லை. அல்லது ெ , ே என்ற இந்தக் கொம்புகளை வேறுவகையில் மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக ஆய்தம் ஒன்று இருக்கலாம்.
உயிர் —- 5
மெய் —– 15
சிறப்புக்குறி —– 8
ஆய்தம் —– 1
———————————
29 உருவ எழுத்துக்களிலேயே கூட தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை அடக்கிவிடலாம். அல்லது சிலர் கருதுவது போல் 12 உயிர் எழுத்துக்களில் ஐ , ஔ , தவிர மற்ற 10 ல் அ – வை அப்படியேவும் ஆ – க்கு பதிலாக – ா – வையும் ,எ – ஏ க்கு பதிலாக ெ , ே – என்ற குறிகளையும் வைத்துக்கொண்டு இ , ஈ , உ , ஊ , ஒ , ஓ என்ற 6 எழுத்துக்களுக்கு 6 புது எழுத்துக்களை உற்பத்தி செய்து கொண்டு இவற்றையே உயிர் மெய்யாக மெய்யோடு சேர்த்துப் படிப்பதனால் அப்போது
உயிர் —- 10
மெய் —– 15
ஆய்தம் —– 1
மெய் குறிப்பு —– 1
——————————–
ஆக 27 எழுத்துக்களாகும். இந்த 27 எழுத்துக்களைக் கொண்டே நமது சகல சொற்களையும் அதிக சுலபமாக எழுதி விடலாம் . பிற மொழிச்சொற்களை நம் மொழியில் எழுதுவதற்குத் தேவைப்பட்டால் ஒன்றிரண்டு வேறு எழுத்துக்களையும் உண்டாக்கிக் கொள்ளலாம். அறிஞர்களும் பண்டிதர்களும் தீர்க்கமாய் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.எப்படியும் தமிழ்மொழி எழுத்துக்கள் குறைக்கப்பட்டாக வேண்டும். அச்சு கோப்பதற்கும் டைப் அடிப்பதற்கும் ஆங்கிலத்தைப்போல் இலகுவாக்கப்பட வேண்டும். கற்கும் பிள்ளைகளும் 3 மாதத்தில் படிக்கத் துவங்கலாம் என்பதுதான் நமது ஆசை.
———————————————————————————–
தந்தை பெரியார் அவர்கள் மொழி, எழுத்து என்ற தலைப்புக்களில் கும்பகோணம் அரசுக்கல்லூரியிலும் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் ஆற்றிய உறையிலிருந்து.
இடுகை 0018
பாண்டியன்ஜி
—- தங்க சங்கரபாண்டிய்ன் தொகுத்தளித்த தமிழர் தலைவர் பெரியார் பேசுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !