திங்கள், டிசம்பர் 26, 2011

டிசம்பர் கொல வெறி !


பாண்டியன்ஜி
____________________________________
....சுநாமி 

அந்த கோர சம்பவத்தை பார்த்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஓடிவிட்டது.

நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. உடலெங்கும் நடுங்குகிறது.இப்படியொரு சம்பவத்தை என் கடந்த காலங்களில் கற்பனையிலும் நான் காண நேர்ந்ததில்லை.

பல்வேறு சமயங்களில் தமிழகத்தின் பல்வேறு கடலோர பிரதேசங்களில் காலாற பயணம் செய்ததுண்டு.அப்போதெல்லாம் கடலலைகளோடு கொஞ்சி மகிழும்ஏராளமான மீனவர் குடியிருப்புகளை கண்டிருக்கிறேன்.பிரியமானவர்களை கடலுக்குள் அனுப்பிவிட்டு காத்திருந்து காத்திருந்து கரையோரம் குடியிருப்புகளை ஏற்படுத்திக்கொண்டவர்களின் மனநிலையை அப்போது என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது,
ஆனால் இலக்குவனின் கோடு தாண்டிய சீதையைப்போல இந்த கடற் காதகியும் பல வேளைகளில் எல்லைதாண்டி உள்ளே வெளியே என்று இந்தமண்ணோடு கொஞ்சி விளையாடியதை பார்த்திருக்கிறேன்.அந்த காதகியின் தந்திரம் இப்போதல்லவா புரிகிறது.
ஆனால் இப்படியா ? எப்படியொரு கல்நெஞ்சம்.
26 டிசம்பர் 2005 ..! 



அன்று காலை ஒன்பது மணியளவில் இந்த கடல் ராட்சசி அடுத்தடுத்து இரண்டுமுறை நிகழ்த்திய கொலைவெறி ..

இப்படி ஒரேயடியாக உள்ளே நுழைந்து கோரதாண்டவம் நிகழ்த்தி எம் மக்களை துவம்சம் செய்வாள் என்ற போக்கில் என் சிந்தனையில் பட்டதேயில்லை.இவளின் கோரதாண்டவத்திற்கு சுனாமி என்று சப்பானியர்கள் பெயரிட்டு அழைத்தபோதுகூட நான் இவளின் வஞ்சகத்தை புரிந்து கொண்டதில்லை.இவள் இங்கு ஆடிய ஊழிக்கூத்தை அவர்கள் சொல்லிய பெயராலேயே இன்று உலகமே அழைக்கிறது.

அப்போது நான் சென்னையிலிருந்தேன்.
வங்கக்கடல் எல்லைதாண்டி சென்னை கடற்கறையோரம் தவமிருந்த தமிழ்ச்சான்றோர்களை கரிய குழம்புகளால் நீராட்டிய காட்சி ....மறக்கதக்கதன்று.

அடுத்த சில தினங்களில் அந்த கோரமான வடுக்களை காண சொந்த ஊருக்கு பயணமானேன்.நாகப்பட்டினநகரமே சரித்திரத்தில் முடிந்துபோன ஒரு போர்க்களம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. மகதமன்னன் அசோகன் அப்போது மனம்மாறிய ரகசியம் இப்போது புரிகிறது.கடற்கறையோரம் கண்ணுக்கெட்டியதூரம் ஒரே சமவெளி . அத்தனையும் குடியிருப்புகள் இருந்த இடம்.குதுகுலத்துக்கும் கொண்டாட்டத்துக்கும் குறைவற்ற இடம்.இப்போது சமரசம் உலாவும் சமவெளிபிரதேசம்.

கொரிய குட்டி எந்திரங்கள் இரவும் பகலும் சுழன்று சவக்காட்டை நிரவியிருப்பதை உணர்ந்து கொள்கிறேன்.

தெரிந்தவர் பார்த்தவர் பழகியவர் என்று பலரை காணவில்லை.பெரும்பாலும் மீன்களை சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இன்று மீன்களுக்கே இரையாகிப்போன துரதிஷ்டம். ஆண்களைவிட பெண்களே பெருவாரியாக குழந்தைகளுடன் இறையான கொடுமை.குழந்தைகளைக் காக்கவேண்டுமென்ற வெறியும் அவர்கள் ஓடுதற்கு தடையாயிருந்த சேலைகளுமே அவர்கள் சாவுக்கு துணையாயிருந்திருக்கின்றன.
இயற்கைக்கு இடஞ்சல் இல்லா விலங்கினங்கள் ஒன்றுகூட இயற்கையின் சீற்றத்துக்கு பலியாகாதது மனிதர்கள் அறியவேண்டியவை. பொக்கிஷமாக போற்றிவந்த பல்வேறு அடையாளங்கள் ஆங்காங்கே கரிய ஈரமண்ணுக்குள் சிக்கிக்கிடப்பதை பார்த்தேன்.ஒவ்வொரு அடையாளங்களும் ஒவ்வொரு கதைகளை கூறக்கூடும். கரைதாண்டி இரண்டுமுறை வந்த பேரலைகள் நகரின் நடுவேயிருந்த தார்சாலையை எட்டி தழுவிய கதையை திரும்பத்திரும்ப பேசிய பலரைப்பார்த்தேன்.அவர்கள் முகங்களில் ஏற்பட்ட நடுக்கம் இன்றும் குறைந்ததாக தெரியவில்லை.ஆங்கிலப் படங்களில் எழுந்துவரும் பிரமிக்கத்தக்க க்ராபிக்ஸ் விலங்குகளைப்போன்று கரிய நிறத்தில் கரையேறி இரண்டுமுறை ராட்சத அலைகள் வந்ததை நடுக்கத்துடன் பேசினார்கள்.ஆழ்கடலில் இருக்கும் அத்தனை கழிவுகளயும் கலக்கி நகரையே நாசம் செய்த கணங்களை அவர்கள் இன்னும் மறந்ததாக தெரியவில்லை.
கடலுக்குச் சென்றிருந்த உறவுகளை காண கரையோரம் மழலைச்செல்வங்களுடன் காத்திருந்த மீனவமகளிர்...கொண்டுவரும் மீன்களை பங்குபோட காத்திருந்த பல்வேறு கூட்டம்...பொங்கிவரும் பேரலையை புதிதாய் கண்டுணர வந்திருந்தகுழந்தைகளும் பெரியவர்களும்..கைகளையும் கால்களையும் ஆவேசமாக ஆட்டி ஆட்டி நடைபயிற்சிக்குவந்த நடுத்தர வயதோர். இவை எதனையுமே அறியாமல் கள்ளம் கபடின்றி விளையாடிக்கழித்த மீனவர் குழந்தைகள்..
அத்தனையையுமே இரண்டுமுறை எழும்பி வந்த பேரலைகள் வாரிசுருட்டிக்கொண்டு போன கொலைவெறி..
எனது இத்தனை நெடிய பயணத்தில் எத்தனையோ வியக்கத்தக்க நிகழ்வுகள் பலவற்றை கண்டும் கேட்டும் பூரித்திருக்கிறேன்.எனினும் என்னை நேரடியாக தாக்கி என் நினைவுகளை பாதித்த மூன்று இயற்கையின் புதிர்களை சொல்லித்தான் ஆகவேண்டும்.
முதலாவதாக தருமபுரி மாவட்டத்தின் எல்லையோர குக்கிராமமான சிங்காரப்பேட்டையில் மின்வாரியபணியிலிருந்தபோது நான் அறிந்த நிலநடுக்கம்.இதற்குமுன்னால் ஜெமினியின் ஔயார் திரைப்படத்திலும் அடுத்தடுத்து செய்தித்தாள்களிலும் மட்டுமே இந்த கோரத்தை பார்த்திருக்கிறேன்.தொடர்ந்து நெய்வேலி சென்னை நகர்களில் பணியாற்றிய போதும் நிலநடுக்கத்தின் விளைவுகளை சந்தித்திருக்கிறேன்.
இரண்டாவதாக 70 களில் விழுப்புரத்தில் பணியிலிருந்தபோது நான் பார்த்து வியந்த ஆலங்கட்டி மழை என்ற பனிக்கட்டி பொழிவு.இந்த பொழிவு பிற பிரதேசங்களுக்கு சதாரணம் என்றாலும் நான் பார்த்து வியந்தவை என்றே சொல்லவேண்டும்.இப்போதெல்லாம் குளிரூட்டும் பெட்டிகளில் கிடைக்கும் அய்ஸ் கட்டிகள் போல வனத்திலிருந்து சீராக சிதறிய அய்ஸ்கட்டிகள்.. பார்த்து ரசிக்கமட்டுமே முடிந்த மறக்கமுடியாத காட்சி அது. 
மூன்றாவதாக வங்கக்கடலோரம் எழிலாய் திகழ்ந்த ஏராளமான கிராமங்களை சுருட்டி விழுங்கி தாண்டவம் ஆடிய சுனாமி.
இதைக்காட்டிலும் அதிர்வூட்டும் இயற்கை நிகழ்வுகள் உலகெங்கும் நிகழ்ந்திருந்தாலும் இந்த மூன்றுமே என்னை நேரடியாக தாக்கிய கூற்றுகள் என்று கருதுகிறேன். இதையும் தாண்டிய எத்தனையோ நிகழ்வுகள் நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சித் தகவல்கள் உலகெங்கும் நிகழ்ந்திருக்கின்றன.


இருந்தாலும் இவைகளே இன்றும் என் நினைவில் நிற்பதாக உணருகிறேன். 

காலம்காலமாக கரையோரம் வாழ்ந்த மீனினங்கள் இடம்மாறி இப்போது அன்னியமீன்கள் நாகைக்கு வரநேரிட்டிருக்கிறது. அதேசமயம் இந்த சீரழிவுக்கு தோள்கொடுக்க வந்தோர் பலர் ஏற்படுத்திய கலாசார மாற்றமும் நாகையில் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறேன்.

வீதிகளில் இறங்கி நடந்தபோது சுவரெங்கும் கண்ணில் பட்ட வண்ண வண்ண சுவரொட்டிகள் விலக மறுத்தன. அத்தனையும் சொந்தமக்களின் அஞ்சலி.பச்சிளங் குழந்தைகள்..பள்ளிக்கு செல்லும் பயமறியாத கன்றுகள்..வாலிப வயது ஆண்கள் பெண்கள்..வயது முதிர்ந்த பெரியவர்கள்.. 
கடல் நீரால் கழுவப்பட்ட அத்தனை பேரும் இப்போது சுவர்களில் கண்ணீர்த்துளிகளால் ஒட்டப்பட்டிருந்ததை கண்ணுற்றேன். எத்தனையெத்தனை பிஞ்சுகள்..காய்கள் கனிகள்..ஒவ்வொருவரையும் கண்களில் நீர் மல்க தரிசித்து நடக்கிறேன்.
இயற்கையின்இரகசியங்களை முழுமையாக உணராத நாம் மேலும் மேலும் அதன் அந்தரங்கத்தை அடிக்கடி சீண்டிக்கொண்டேயிருக்கிறோம்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது.. முதியவர்கள் பேசக்கேட்டிருக்கிறேன்.
எத்தனை உண்மையானது



இடுகை 0080

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !