சனி, அக்டோபர் 03, 2015

தமிழர்தம் கம்பீரம் !



வில்லவன்கோதை
தமிழகத்தின் தென்பகுதி.
வணிகச்சந்தைக்குப் பெயர் பெற்ற விருதுநகர் 
தொள்ளாயிரத்து  மூன்று , ஜூலை பதினைந்து  
மிகமிகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சார்ந்த ஒரு சாமான்ய குடும்பத்தில் பிறக்கிறது ஒர் அபூர்வக்குழந்தைபிற்காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் இந்தத் தமிழ் மண்ணுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வரலாற்று ஏடுகளில் தன்னைத்தானே  எழுதிக்கொள்ளப்போகிறது என்ற தகவலை அன்று எந்தச்சோதிடனும் கணித்திருக்க  முடியாது.
குலதெய்வம் காமாட்சியின் திருப்பெயரை  குழந்தைக்குச் சூட்டுகிறது அந்தக்குடும்பம்தாயார் சிவகாமி அம்மாளோ பெற்ற மகனை ராசா , ராசா என்று செல்லமாக அழைக்கிறார்காலப்போக்கில் காமாட்சி  என்ற திருப்பெயர்  காமராசாவாகிறது..
விருதுநகர் சத்திரிய வித்யாலயாவில் ஆரம்பக்கல்விக்கு சேர்க்கப்பட்ட காமராஜ் ஆறாம் வகுப்புக்குமேல் வாசிக்க முடியாமற் போயிற்றுஇளம்வயதிலேயே தந்தையை இழக்கிறார்பள்ளிப்படிப்பற்றபோது வியாபாரம் பழகத் தாய்மாமன் நடத்திய துணிக்கடைக்கு அனுப்பப்படுகிறார் அதையும் கடந்து அடுத்தடுத்து குறுக்கிட்ட எந்தவேலைகளும் அவருக்கு நிலைக்காமற் போயிற்று.
தேசமே வெள்ளையர் ஆதிக்கத்தில் அடிமையுற்றிருந்த காலம்.
நாடெங்கும் விடுதலைவேட்கை புயலாக வீசிற்றுதேசப்பிதா  காந்தியின் தென்னிந்திய வருகை காமராஜரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திற்றுஅண்ணலின் விருப்பத்திற்கிணங்க கதராடைகளை அணியத் துவங்குகிறார் காமராஜர்.
வெள்ளையர்க்கெதிரான தமிழககாங்கிரஸ் தலைவர்களின் சூராவளிப் பிரச்சாரம் காமராஜரின் அரசியல் வாழ்வுக்கு அடிகோலுகிறதுதீரர்   திருமயம் சத்தியமூர்த்தியின் எழுச்சிமிக்க உரைகள் காமராஜரை அவர்காலடியில் கொண்டுசேர்க்கிறதுகாமராஜரின் தன்னலமற்ற உழைப்பு சத்தியமூர்த்திக்கு மகிழ்வூட்டுகிறது.

பதினாறு பதினேழு வயதிலேயே அவரது முழுநேர அரசியல்வாழ்வு தொடங்கிவிட்டதுதொள்ளாயிரத்து முப்பதில் ராஜாஜி தலைமையில் வேதார்ணியம் உப்பு அள்ளும் போராட்டம். கைதாகி கல்கத்தா அலிகார் சிறைவாசம். தொள்ளாயிரத்து நாற்பதில் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகிறார் . சிறையில் இருந்தே விருது நகர் நகராட்சித்தலைவர் தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஒன்பதுமாத சிறைக்குப்பிறகு வன்முறையற்ற நிரபராதியாக வெளியே வருகிறார்.
நாற்பத்திரெண்டில் ஆகஸ்ட் புரட்சி. காமராஜருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல், தேசவிடுதலைக்காக தொடர்ந்து போராட்டங்கள்  சத்யாகிரகங்கள்.
தொள்ளாயிரத்து முப்பதிலிருந்து நாற்பத்தியேழுவரை மாறிமாறி  சிறைவாசம். விருதுநகரிலும் காங்கிரஸ் பேரியக்கத்திலும்  காமராஜர் ஒரு தவிர்க்க இயலாத அடையாளமாகிறார்.
நாற்பத்தியேழில் தேசம் விடுதலையுற்றபோது அந்த ஆனந்தத்தைக் கொண்டாட அவர் தலைவர் சத்யமூர்த்தி இல்லைஓடோடிச்சென்று  அவர் வீட்டு  வாயிலில் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்.
மூதறிஞர் ராஜாஜி முதல்வராகிறார்ஐம்பத்துமூன்றில் ராஜாஜியின்  குலக்கல்வித்திட்டத்திற்கேற்பட்ட பேரெதிர்ப்பு ராஜாஜியின் விருப்பத்துக்கு மாறாக காமராஜரை ஒரு தமிழ்ப்புத்தாண்டில் தமிழ்நாட்டின் முதல்வராக்குகிறது.
எட்டே எட்டு அமைச்சர்கள்.!
தன்னையெதிர்த்து ராஜாஜியின் நல்லாசியுடன் போட்டியிட்ட  சி சுப்ரமணியம் அவர்களையும் அவரது சகாவான பக்தவசலம் அவர்களையும் தன் அமைச்சரவையில் அரவணைத்துக்கொள்கிறார்.
அதுமட்டுமல்லதேர்தலில் காங்கிரசையே எதிர்த்துப் போட்டிட்டு  திமுகவின் ஆதரவோடு வெற்றிபெற்ற காங்கிரஸ்கார்களான ராமசாமிப்படையாச்சி , மாணிக்கவேலு  இருவரையும்கூட அமைச்சர்களாக்கி அரசுக்கும் கட்சிக்குமான இடர்களைக் களைகிறார்சாதிப்பேய்கள் தலைவிரித்தாடிய அந்த காலத்திலேயே பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவருக்கு அறநிலையத்துறையைக் கொடுத்து தனக்கிருந்த  பகுத்தறிவையும் ராஜதந்திரத்தையும்  வெளிப்படுத்துகிறார்.
தமிழ் ஆங்கிலம் இந்தி மட்டுமின்றி வேறு சில மொழிகளையும் அவர் நன்கு அறிந்திருந்தார் .பள்ளிக்கல்வி அவருக்கு கிட்டாமற் போனாலும் படிக்கவேண்டிய நூல்களை படிக்கத்தவறியதில்லை. எப்போதும் கற்றவர்களை தன்னோடு சோர்த்துக்கொண்டது அவரது வெற்றியின் ரகசியம் என்றே கருதுகிறேன்.  .

நாடு விடுதலைபெற்று குடியரசானபோது வெள்ளையர் ஆட்சியில் சுரண்டப்பட்ட தேசத்தை செதுக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கு இருந்தது.
புதிய ஐந்தாட்டுக்கான திட்டங்கள் வரையப்பட்டன .
காமராஜர் தமிழக காங்கிரஸ் இயக்கத்தில் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார்.  மத்தியிலும் அவர் கட்சியே ஆட்சியில் இருந்ததால் ஐந்தாண்டுத்திட்டங்களில் தமிழகத்தின் பங்கு கணிசமாக அதிகரித்தது
விவசாயத்துக்குப் பெரிதும் முக்கியத்துவம் அளித்த மத்தியஆட்சியில் தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டனஅடுத்தடுத்து வந்த ஆட்சிகள் அந்த திட்டத்தின் மதகுகளையே ஆண்டுக்கு ஆண்டு  திறந்து இன்னமும் சாதனை பேசிக் கொண்டிருக்கின்றன.

மின்சார  உற்பத்திக்குக் குந்தா நீர்மின்திட்டங்கள்  மேட்டூர் மின் நிலையங்கள் ரஷ்ய உதவியோடு துவக்கப்பெற்ற நெய்வேலி அனல் மின்நிலையம் முக்கியமானவைதொழில்துறையைப் பொறுத்தமட்டில் பாரத மிகுமின் நிறுவனம் நெய்வேலி  பழுப்பு நிலக்கரி நிறுவனம் மணலி சிபிசிஎல் எண்ணை சுத்திரிப்பு நிறுவனம் கிண்டி மருத்துவ உபகரணங்களுக்கான தொழிற்சாலைமேட்டூரில் காகித ஆலை உதகமண்டலத்தில்  நிழற்படச்சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை அத்தனையும் அவர் காலத்தில்  ஏற்பட்டவை.
தொழில்துறையில் இன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் அவர் காலத்தில் கிடைத்தவை.. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் ஏறதாழ அறுபது ஆண்டுகள்  கடந்தபின்னும் உறுதியாக நின்று  இன்றும் காமராஜர் நிர்வாகத்தை நினைவூட்டுகிறது
ஆட்சி அதிகாரங்கள் கட்சிக்குக்கிடைத்தபோது அரசு எந்திரங்களை  முடிக்கிவிடக் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் எல்லாம் அரசில் பங்கேற்கிறார்கள்அதேசமயம் தேசவிடுதலைக்குக் காரணமாய்  இருந்த காங்கிரஸ் இயக்கம் தனிமைப்படுகிறதுஆட்சிக்கட்டிலில்  இளைஞர்களுக்கு வழிவிட்டு முதியவர்கள் கட்சியைக்காக்க தயாராகவேண்டுமென்ற திட்டத்தை முன்வைக்கிறார்  காமராஜர். அப்படியொரு திட்டத்தை பண்டித நேரு ஏற்கிறார்.
காமராஜரே எல்லாருக்கும் முன்மாதிரியாக முதன்மந்திரி பொறுப்பில் இருந்து விலகி வழிகாட்டுகிறார்முதுபெரும் இந்தியத்தலைவர்கள் எல்லாம் காங்கிரசை காக்க காமராஜரைப்பின் தொடர்ந்தனர். அறுபத்திமூன்றில் ஏற்பட்ட அத்தகைய சிந்தனை  கே - ப்ளான்  என்று அரசியல் நோக்கர்களால் பெரிதும் பேசப்பட்டது.
அறுபத்திநான்கில் பண்டிதநேரு மரணமுற்றபோதும் அறுபத்தியாறில் லால்பகதூர் மறைந்தபோதும் சரியான காய்களை நகர்த்திக்  காங்கிரசின் மிகப்பெரிய சிக்கலைத் தவிர்த்தவர் பெருந்தலைவரே.
அறுபத்தியேழில் தமிழகம் முழுதும் வீசத்தொடங்கிய திராவிடச்சூராவளி காமராஜரையும் விட்டுவைக்கவில்லைதமிழக சட்டமன்றத்தேர்தலில் திமுகவின் மேடைப்பேச்சும் சாதீயக் கட்டமைப்புகளும்  சொந்த ஊரிலேயே பெருந்தலைவரைத் தோற்கடிக்கிறது  தொடர்ந்து வந்த கன்யாகுமரி நாடாளமன்ற இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று டெல்லிப்பட்டணம் போகிறார்.
அடுத்து நேருவின் மகளோடு ஏற்பட்ட மனக்கசப்பு சிண்டிகேட்  காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தோன்றுதர்க்குக் காரணமாகிறது.  எழுபத்தைந்தில் இந்திராகாந்திக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அவர் பிகடனப்படுத்திய நெருக்கடி நிலை தேசத்தையே அதிர்வுக் குள்ளாக்குகிறதுதேசியத்தலைவர்கள் அத்தனைபேரும் இரவோடு இரவாகச் சிறைப்படுத்தப் படுகின்றனர்காமராஜர் மனமுறிந்து போகிறார் தமிழ்நாடு கலைஞர் கருணாநிதியின்  இரும்புக்கர அரவணைப்பில் இருந்த நேரம். நெருக்கடிநிலையின் நீண்ட கரங்கள் தமிழகத்தை எட்டாதிருந்த சமயம்.
வரப்போகும் விடுதலை நாளில் எல்லாம் சரியாகுமென்று நம்பிய காமராஜர் முதுபெருந்தலைவர்    ஆச்சாரிய க்ருபளானியும் கைது என்றபோது  பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்
அதே ஆண்டு அக்டோபர் இரண்டில் காந்தி பிறந்தநாளன்று இந்தக்  கருப்பு காந்தி நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறார். கொட்டும் மழையில் பெருந்தலைவரின் பூத உடலுக்கு தோள் கொடுத்து கலைஞர்தான் கடைசியாக விடை கொடுக்கிறார்.
இந்தக் காமராஜரின் ஆட்சியைத்தான்
இப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் கொண்டு வருவோம்   என்று பெருவாரியான குரல்கள் தேர்தலுக்கு  தேர்தல் உயர்ந்து ஒலிக்கிறதுஆனால் இந்தமுறை வித்தியாசமான   இன்னொரு நிகழ்வையும்   காண்கிறேன்.
வழக்கமாக இதுபோன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் பேரியக்கமே  தேர்தலுக்கு தேர்தல் முன்வைக்கும்ஆனால் இந்தமுறை வேறுசில கட்சிகள்கூட  இந்தச் சொற்களை உரக்கப் பேசுகிறது.
காங்கிரஸ் பேரியக்கம் தமிழகத்தில் திராவிடக்கட்சிகளிடம்  ஆட்சியைப் பறிகொடுத்து ஏறத்தாழ   ஐம்பது  வருடங்களுக்குமேல்  கடந்து  விட்டது.  அந்தக் கட்சியின் தலைவர் காமராஜரோ   இந்த மண்ணில்  மறைந்து    நாற்பது  வருடங்கள் ஓடிவிட்டதுஇந்த நிலையிலும்  இப்படியொரு சிந்தனையை இந்தக்கட்சிகள்   பரவலாக வாக்குறுதியாகச் சொல்லப்படுவதும் அதையும் இன்றையதலைமுறை பெரும்கனவுகளாக எதிர்நோக்குவதும் இயல்பாக நிகழக்கூடியதல்லஅதர்க்கான அடிப்படை காரணம் என்னவாக இருக்க முடியும்.
  பார்க்கலாம்.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை காலங்காலமாக மாறிமாறி  ஆண்டு வந்தவர்கள் குறுநிலமன்னர்கள்அவர்கள் காலங்களில்  எப்போதோ சிலசமயம் பொற்கால ஆட்சி நிகழ்ந்ததாக வரலாறு  பேசுகிறதுதம்மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்துகொடுத்த எந்தக்குறுநிலமன்னனும் தம்குடிமக்களுக்குக் கல்வியைப் போதித்ததாக வரலாறு இல்லை.
அவர்களுக்குப்பிறகு வந்த ஆங்கிலேயர் இந்தநாட்டின் சகல  வளங்களையும் மாறிமாறிச் சுரண்டினர். இருந்தபோதும் அவர்களுடைய தேவைக்காக அவர்களுடைய நிர்வாக வசதிக்காக இந்தத்தேசத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் நவீன திட்டங்கள் நமக்கு முதன்முதலாக அறிமுகமாயிற்றுஅவற்றில்  அவர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முதன்மையானது.
வெள்ளையரின் கொள்ளையில் சிதறிக்கிடந்த இந்த மண்ணைச் சீரமைத்துத் தான் பயிலாத கல்வியின் ருசியை எப்பாடு பட்டாயினும்  எம்மக்களுக்குக் காட்டிவிட்டால் இந்தத்தேசம் எப்படியும் முன்னுக்கு வந்துவிடக்கூடுமென்று காமராஜர் நம்பினார்முதலமைச்சராகப்  பதவியேற்றவுடன் ராஜாஜியின் கல்விக்கொள்கையால் மூடப்பெற்ற ஏழாயிரம் பள்ளிகளைத் திறந்து மேலும் இருபத்தேழாயிரம்  பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டார்.
தமிழகமெங்கும் பள்ளிகள் பரவலாகத் திறக்கப்பட்டு விட்டாலும்  மாணவர் சேர்க்கை உயர்ந்துவிடவில்லைஅறுபதுகளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு இந்தச் சிக்கலை எளிதில் விடுவிக்கிறது.
ஒருமுறை பொதுநிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு தன் சகாவான தொழிலமைச்சர் வெங்கட்ராமனுடன் திரும்பிக்கொண்டிருந்தார்.  இடையே குறுக்கிட்ட ரயில்வே க்ராசிங்கில் அவர்கள் காத்திருக்க  நேரிட்டதுஅப்போது ஒரு சிறுவன் கையில் ஒரு கம்புடன்   நின்றிருந்தான்.
‘’ தம்பி நீ பள்ளிகொடம் போவலியா...ஓங்க ஊர்லதான் சர்க்கார்  பள்ளிக்கொடம் தொறந்திருக்காங்களே ‘’
அவன் தோளைப்பிடித்து அன்பாக வினவுகிறார் காமராஜ்.
‘’ நான் பள்ளிக்கொடம் போனா சோத்துக்கு என்னய்யா பண்ணுவன் ரெண்டு மாடுமேச்சா ஒருவேள சோறாவது கெடைக்கும். ‘’
என்றவாறே மெல்ல நகர்கிறான் அந்தச் சிறுவன்.
காமராஜரின் முகம் மாறுகிறது.
‘’ அவன் சொல்றதும் ஞாயந்தாண்ணே.... இந்தப் பிள்ளைகளுக்கு ஒருவேளை சோறுபோட்டா எப்படியும் படிப்போட ருசியை  காட்டிடலாம். வெங்கட்ராமன் அதுக்கு ஒரு திட்டம் வேணுமிண்ணே. ‘’
வெங்கட்ராமன் மெல்லிதாகப் புன்னகைக்கிறார்முதலமைச்சரின்  இந்தச் சிந்தனை சிறுபிள்ளைத்தனமானது என்று அவர் கருதியிருக்கக்கூடும்சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் இதுபோன்றதொரு  திட்டம் நீதிக்கட்சிகாலத்தில் தொடங்கி நடத்தப்பட்டது அவர் நினைவுக்கு வந்தது
ஆனால் தமிழ்நாடு முழுதுமா..
அவருக்குச் சாத்தியம் என்று தோன்றவில்லை.
‘’ ஸ்ட்டேட் முழுதுமா    நாட் பாசிபிள். சட்டத்ல எட்டமில்ல சார் ‘’
அவசரம் அவசரமாகக்  குறுக்கிட்டார்  உடன்வந்த  ஒர்உயரதிகாரி.
‘’ என்னண்ணேநான் புள்ளைங்களுக்குச் சோறுபோடனுமிண்ணு சொல்றேன் .நீ சட்டம் பேசிறியேசட்டத்த யாருபோட்டா.  யாருக்காகப் போட்டீங்கசெய்யரத்துக்கான வழிய பாருண்ணேன். ’’
கண்கள் சிவக்க பொரிந்து தள்ளுகிறார் காமராஜர்.
அடுத்தச் சில வாரங்களில் ஒருசில பள்ளிகளில் அவசரம் அவசரமாகத் துவக்கப்பெற்ற மதிய உணவுத்திட்டம் மெல்லமெல்ல விரிவாக்கப் பட்டுப் பரவலாகத் தமிழகம் முழுதும் நிறைவேற்றப்படுகிறது.  அடுத்தடுத்துவந்த ஆட்சிகளும் இந்தத் திட்டத்தைப் பல்வேறு  வடிவங்களில் விரிவாக்கி சத்துணவு திட்டமென்று செயல்படுத்தி வருகிறதுதமிழ்நாட்டு குழந்தைகளின் கல்விக்கு இருந்த இடையூறை  நீக்கி படிப்பில் ருசி காட்டியவர் காமராஜரே.
வெரும் ஏழு விழுக்காடாக இருந்த மாணவர் வருகை அவர் காலத்தில்தான் முப்பத்தேழு விழுக்காடாயிற்றுபள்ளிகளின் வேலைநாட்கள்  நூற்றுயெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தப்பட்டதும் அவருடைய காலத்தில்தான்அனைத்து தொடக்கப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி  ஆசிரியர்க்கு  ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்தவர் காமராஜரே.
அவர் முதல்வரான பிறகு அரசு விருந்தினராக அயல்தேசத்திலிருந்து  வந்த பெண்மணி ஒருவர் காமராஜரிடம் எழுப்பிய வினா இப்போது நினைவுக்கு வருகிறது.
‘’ மிஸ்டர் காமராஜ்   நீங்க ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை ‘’
‘’ மேடம் எங்கதேசத்தில் திருமண வயதுக்கு வந்த பெருவாரியான சகோதரிகளுகளுக்கே  இன்னமும் திருமணம்  ஆகாமலிருக்கு. ‘’
பெருந்தலைவரின் பதில் அந்த அம்மையார் சற்றும் எதிர்பாராதது.  இந்த மண்ணின் மக்களோடு இந்தமனிதர் எத்தனை கலந்து நிற்கிறார் என்றுணர்ந்து நெகிழ்ந்து போகிறார்.
அண்ணல் காந்தியின் எளிமையை முழுமையாக கடைபிடித்தவர் காமராஜ். அதேசமயம் பண்டித நேருவின் உலகளாவிய விருப்பங்கள் இந்ததேசத்து மக்களுக்கு கிடைக்கவேண்டுமென கருதியவர் .
காமராஜரின் கால்த்தடங்கள் படாத சிற்றூர்கள் தமிழகத்தில்                      இல்லையென்றே சொல்லலாம்வெயில்  புயல்  வெள்ளம் மழை
வேட்டியைத் தூக்கிப்பிடித்து   நடை   நடை   நடைதான்.
ஒவ்வொன்றையும் நேரில் ஆய்வு செய்து காரியத்தை முடித்த தலைவர் காமராஜ்அவரைப்பொறுத்தவரைச்சட்டங்கள் மக்களுக்காகவேசட்டத்தின் வரைவுகளை  வெருமனே சொல்லி அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நலன்களை எவரும் தடுத்துவிடக்கூடாதென்பதில் உறுதியாக நின்றார்அவரது  வாழ்வில் ஒவ்வொரு தருணங்களிலும் நிகழ்ந்த நிகழ்வுகள்  இதைத்தான் பரைசாற்றுகின்றன.
இன்னொருமுறை .அவருடைய சகோதரி பேரன் கனகவேல் மருத்துவக்கல்லூரி ஒன்றில் சேருவதற்குத்  தாத்தாவின் பரிந்துரைக்கு வந்திருந்தார்.
‘’ கனகவேலு ! மெடிக்கல் காலேஜில சேர சர்க்கார் கமிட்டில்லாம்  வெச்சிருக்கு .அத அவுங்கதாண்ணே முடிவு பண்ணணும்ஒனக்கு  தகுதி இருந்தா நிச்சியம் கெடைக்கும்இல்லேண்ணா கோயமுத்தூர்ல அக்ரில சேந்துக ‘’
தங்கள் தலைவரின் இந்தப்பதில் சூழ்ந்திருந்தோர்க்குப்  பெருவியப்பைத் தந்தது இதே தலைவரின் இன்னொரு செயல் -
தஞ்சை மாவட்டத்திலோ கோவையிலோ சுற்றுப்பயணம்    மேற்  கொண்டபோது மருத்துவக்கல்லூரி பரிந்துரைக்கான விண்ணப்பம்  ஒன்று அவர் பார்வைக்கு வருகிறது.
மருத்துவக்கல்லூரியில் சேருவதென்பது அன்று பிராமணர்களுக்கே  உரியதாயிருந்ததுமுன்னதாக நீதிக்கட்சி ஆட்சியில்தான்  விண்ணப்பத்தில் அந்தப்பகுதி நீக்கப்பட்டதைப் படித்திருக்கிறேன்.  விண்ணப்பத்தைப் புரட்டிப்பார்த்த காமராஜர் கையெழுத்திட்டு  கொடுக்கிறார்
இதுபற்றி வினவியபோது
‘’ கீழ பாத்தில்ல.. அவுங்கப்பன் கைநாட்டு வச்சிருக்காண்ணேஅது போதாதா ‘’
என்றவாறே நடக்கிறார் தலைவர்.
உறவுகளில் இருந்து எத்தனை விலகி மக்களை நெருங்கியவர்   காமராஜ்.
தன்னுடைய நெடும் பயணத்தில் உற்றார் உறவினருக்கு ஒருபோதும் இடமில்லை என்பதில் உறுதியாயிருந்தவர்வயது முதிர்ந்த  பெற்றதாயைக் கூடத் தன்னோடு இணைத்துக்கொள்ளாமல் ஒர்  எளிமையான வாழ்க்கைக்குப் பழக்கியவர் காமராஜ்அரசியல் ரீதியாக காங்கிரஸ் இயக்கத்தை  எதிர்த்து நின்ற திராவிட இயக்கம் காமராஜரின் தன்னலமற்ற வாழ்வை ஒருபோதும்  கைநீட்டிக்குற்றம் சாட்டியதில்லை.
தொண்ணூறு வயதிலும் பச்சைத்தமிழன் காமராசருக்காக தமிழகத்தின் தெருத்தெருவாக அலைந்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் செய்ய நினைத்ததை செய்துமுடித்தவர்  காமராஜர்.
முதன்முதலாக சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றிய போது காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கு அண்ணாசாலையில் வெண்கலச்சிலை எழுப்பிக்கொண்டாடியது நினைவுக்கு வருகிறது. காமராஜரை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்தாலும் அவர் வாழ்ந்தபோதும் மறைந்தபோதும் அவரை போற்றிக் கொண்டாடியது கலைஞர் அரசுதான்.

தமிழர்தம் கம்பீரத்துக்கு அடையாளமாக திகழ்ந்த காமராஜரின்  கடைசிக்காலம் அத்தனை சுவாரஸ்யமானாக இல்லை. கப்பலோட்டிய தமிழன் வா உ சியின் கடைசி நாட்கள்தாம்  என் நினைவுக்கு வருகிறது.
பத்தாண்டுகளுக்குக்குமேலாக காங்கிரஸ்கட்சிக்கு தலைவரகவும் பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராகவும் இருந்த காமராஜ் உயிர் பிரிந்தபோது அவர்  கையில் இருந்ததென்னவோ நூற்று அறுபது ரூபாய்தானாம்அசையும் சொத்துக்களையோ அசையா சொத்துக்களையோ எதனையும் அவர் விட்டுச்செல்லவில்லைதனக்கென நேரடியான எந்த  உறவுகளையும் அவர் ஏற்படுத்திக்கொள்ளவில்லைநம்புங்கள்.
இப்படியொரு தன்னலமற்ற அரசியல் தலைவர் இனி காண்பதர்க்கு  கிடைப்பாராஅரசியல்வாதிக்கான அர்த்தம் அவரோடு போய்விட்டதாகவே கருதுகிறேன்.

காந்திக்கப்பறம் காமராஜ் என்றுதானே இன்னமும் தமிழ்நாட்டில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்
---------------------------------------------------------------------------------------
தமிழருவி மணியன் தேர்ந்தெடுத்து வல்லமை இணைய இதழில் பிரசுரிக்கப்பெற்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மறுமொழி ( comment) இடுங்கள் !